மு.தளையசிங்கத்தின் 'மெய்யுள்":

காலவெளி கடந்த கருத்துநிலைகள் பற்றிய ஒரு மறுவாசிப்பு



                                                                                                               இ.இராஜேஸ்கண்ணன்

தமக்கென ஒரு படைப்பாக்கக் கொள்கையினையோ அல்லது கருத்துநிலையினையோ வரித்துக்கொள்ளாது படைப்பாளிகள் இயங்குவது சாத்தியம் குறைந்தது. தமக்குள் ஒத்த கருத்துநிலை உடையவர்கள் ஓர் இயக்கமாக தொழிற்பட விளைகின்றனர். முரண்பட்ட கருத்துநிலையுடைய தனிமனிதர்களோ குழுக்களோ தாம் நம்பாத அல்லது நம்பமறுக்கின்ற எதிர்க்கருத்துநிலையினை விமர்சிப்பதும், சாடுவதும், மறுதலிப்பதும் இயல்பானதே. இலக்கியத்துறையில் தம்முள் வேறுபட்ட கொள்கைகளாலும் கருத்துநிலைகளாலும் முரண்படுபவர்கள் தங்கள் முரண்பாட்டினை ஆரோக்கியமான வழியில் வளர்த்துச் செல்வதன் மூலம் திறந்த கருத்தாடல்களை உருவாக்க விளைந்துள்ளனர். தீவிரமான கொள்கைப்பிடிப்புடன் இத்தகைய கருத்தாடல்களில் ஈடுபட்டவர்கள் தனிமனித இயக்கங்களாகக்கூட தம்மை நிலைநிறுத்தியுள்ளனர். ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளியில் எஸ்.பொன்னுத்துரை(எஸ்.பொ.) மற்றும் மு.தளையசிங்கம்(மு.த.) ஆகியோர் முதன்மையான படைப்பாளுமைகளில் இருவர். இவர்கள் தங்கள் கருத்து நிலைகளாலும் தத்துவநோக்ககளாலும் ஒரு காலகட்டத்தில் தம்மை தனிமனித இயக்கங்களாக வடிவமைத்துக்கொண்டனர். 

கவிதை, சிறுகதை, புனைவுசாராக் கட்டுரை இலக்கியம், நாவல் முதலிய இலக்கிய வடிவங்களுக்கூடாக நன்கறியப்பட்ட தமிழ் எமுத்தாளர் மு.த. அவர்கள். 1965-இல் 'புதுயுகம் பிறக்கிறது", 1970-இல் 'போர்ப்பறை", 1974-இல் 'மெய்யுள்" என்பன வெளிவந்த முதன்மையான நூல்கள். நமக்குக் கிடைக்கப்பெற்ற மு.த. அவர்களின் படைப்பாக்கங்கள் யாவற்றிலும் அறுந்துவிடாத தொடர் மையநீரோட்டமாக அமைவது 'மெய்யுள்" எனும் அவரது இலக்கியம் பற்றிய தத்துவ தரிசனமே. குறிப்பாக மெய்யுள் எனும் அவரது நூலின் உள்ளடக்கம் பூரணாமாகவே மு.த.வின் தத்துவப்பார்வையாகவும் கருத்துநிலைகளின் செறிவாக்கமாகவும் அமைந்துகிடக்கிறது. 1971,1972-களில் வெளியான மு.த.வின் கட்டுரைகளின் தொகுப்பாகவே 'மெய்யுள்" எனும் நூல் அமைந்ததாக மு.பொன்னம்பலம்(மு.பொ.) குறிப்பிடுன்றார்(மெய்யுள்,ப.09). மு.த.வின் படைப்பாக்கக் கருத்துநிலைகளின் தடத்தில் பயணிப்பவர்களுக்கு ஷமெய்யுள்| தத்துவப் பிரமாணமாகி நிற்கின்றது. 

ஷமெய்யுள்| எனும் மு.த.வின் தத்துவதரிசன நூலின் வழியாக வெளிக்கொணரப்படும் அவரது இலக்கியப் படைப்பாக்கம் தொடர்பான கருத்துநிலைகளை இன்றைய இலக்கியபோக்குடன் பொருத்திப் பார்ப்பதன்வழி மீள்வாசிப்புச் செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்னர் பல்வேறு எழுத்தூடகங்கள்வழி வெளிவந்த அவரது சிந்தனைகள் 2002-இல் மெய்யுள் என்னும் நூலாக சென்னை சந்தியா பதிப்பகத்தால் மு.பொ-வதும் சுந்தர ராமசாமியதும் முற்குறிப்புடன்  வெளியிடப்பட்டது. 1970-களின் சமூக மற்றும் இலக்கிய நிலவரத்துக்கும் இன்றைய சமூக மற்றும் இலக்கிய நிலவரத்துக்கும் இடையிலான கால இடைவெளியையும், அந்தச் சிந்தனைகள் கட்டுரைகளாக வெளிவந்த காலத்தின் சமூக, அரசியல் நிலவரங்கள் மற்றும் இலக்கியப் போக்குகளையும் கருத்திலெடுத்து மெய்யுள்ளை மறுவாசிப்புச் செய்யும்போது தமிழிலக்கியப் படைப்பாக்கவெளியில் சில புதிய கருத்தாடலுக்கான சாளரங்கள் திறக்கப்படுவதன் அவசியம் உணரப்படலாம். 

சுந்தர ராமசாமி தனது முற்குறிப்பில் 'மு.தளையசிங்கம் பெருமளவுக்கு தன்னில் இருபதாம் நூற்றாண்டுக்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற சிந்தனையாளர். உடல்கள் இருபதாம் நூற்றாண்டில் கிடந்து உழல, பிரக்ஞை முந்திய நூற்றாண்டு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ கூறுபட்டுக்கிடக்க, பிரச்சினைகளுக்கு எதிர்வினையாக வாய்க்கு வரும் சொற்களை உதிர்க்கும் நம் 'சிந்தனையாளர்"களின் மத்தியில் விதிவிலக்காக வந்து சேர்ந்தவர் தளையசிங்கம். இருபதாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கும்போது இவருடைய சிந்தனைகள் கருக்கொண்டுள்ளன என்று சொல்லலாம்"(மெய்யுள், ப.21) என்று குறிப்பிட்டுள்ள கருத்தானது நுணுகி நோக்கபப்படவேண்டியது. இருபது நூற்றாண்டுகளின் சாரத்தை வெளிப்படுத்திய சிந்தனையாளராக மு.த இனங்காணப்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து புரிந்துகொள்ளுவது அவசியம். இதுநாள்வரை மனிதனிகுலத்தை வழிநடத்திய தத்துவங்கள் குறைபோக்குடையன என்று கருதினார். மனித குலத்தின் சரித்திரத்தில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் வளர்வதற்கு முன்னர் இருந்த காலம், விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதனை விண்வெளிவரை செல்லவைத்ததும் பொருளை முதன்மைப்படுத்தியதுமான காலம், விஞ்ஞானத்தின் உண்ணோக்கம் சிதைந்து அதன் தீமைதரு விளைவுகள் மேலேழுந்துவர சமயமும் ஆன்மீகமும் சிதைந்துபோன காலம் என்று சரித்திரம் முழுமை குறித்தும் கரிசனை கொள்ளும் மு.த, அந்தச் சரித்திரத்தைச் சீர்ப்படுத்தும் வழி சத்தியமும் உண்மை ஞானமும் என்றார். இதுவே 'பேர்ஞானநிலை" என்றும் 'சர்வோதயம்" என்றும் குறிப்பிட்டார். 

பேர்ஞானநிலையை நோக்கி நகரும் மு.த-வின் மெய்யுள் பற்றிய சிந்தனைகள் பல்வேறு கருத்துநிலைத் தளங்களின் அடிப்படையில் கட்டிவளர்க்கப்பட்டவை. அவற்றில்,

இந்துமதம் அல்லது இந்தியப் பண்பாடு தந்த தத்துவங்களிலான திழைப்பும் இராமகிருஸ்ணர், அரவிந்தர், மஹாத்மா காந்தி, நந்தகோபாலகிரி முதலானவர்களின் சிந்தனை வயப்பாடும், தான் சரர்ந்த ஆன்மீக இயக்கத்தின் கொள்ளைவழிநின்று வாழ்வையும் இலக்கியத்தையும் தரிசித்தல்

பொருளை மறுப்பதற்கான வழி பொருள்முதல்வாதத்தை மறுதலித்தல் என்ற நோக்கில் மாக்ஸியம் கூறும் தத்துவ அடிப்படைகளை விமர்சித்தல் அல்லது நிராகரித்தல்

ஈழத்துத் தமிழ் இலக்கிய செல்நெறியில் முரண்நிலையில் தொழிற்பட்ட இரண்டு இலக்கிய இயக்கங்களான முற்போக்கு இலக்கிய இயக்கம் மற்றும் நற்போக்கு இலக்கிய இயக்கத்தின் போக்குகள் குறித்து எதிர்வினையாற்றுல்

விஞ்ஞானத்தின் அணுகுமுறைகளுக்கும், பொருள்முதல்வாத விளக்கங்களுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை மறுதலித்து, விஞ்ஞானமும் மெய்ஞானமும் அத்துவிதமாகிவிட்டது என எடுத்துரைத்தல்

விஞ்ஞானத்திலுள்ள கோட்பாட்டு நம்பிக்கைகளை ஏற்கனவே சமய ஞானம் நீருபித்துள்ளது என வாதிடுவதன்வழி சமயங்களின் அடித்தளப் பார்வையையும் விஞ்ஞானத்தின் மேற்றளப் பார்வையையும் வேறுபடுத்துவதன்மூலம் வரலாற்று வளர்ச்சி பற்றிய பொருள்சார் நோக்குநிலைகளை நிராகரித்தல்

இந்தியப் பண்பாட்டின் உள்;றிய ஆன்மீகத் தத்துவங்களை ஒளியாக்கொண்டு பூரண இலக்கியமும் பெருந்தள வாழ்வும் எவ்வாறு அமையவேண்டும் என்று வியாக்கியானம் செய்தல்

என்பன அவரின் நூல்களில் வெளிப்படையாக இனங்காணத்தக்கவை. இவற்றுக்கு அப்பால் 1956-ஆம் வருடத்தினை ஒரு நிலைமாற்றத்துக்கான தொடக்க காலமாகக் கருதி ஈழத்திலும் சர்வதேசத்திலும் அரசியல் மற்றும் சமூகநிலைகளில் நிகழ்ந்தேறிய மாற்றங்களை முன்னிறுத்தி இடதுசாரியம், முற்போக்கு, மரபுவாதம் என்பவற்றையெல்லாம் கடந்து, தாம் நம்பும் 'பூரண சர்வோதய" பார்வை வளரும் என்று விவாதிக்கின்றார். 1970-இலிருந்து இந்தப் பார்வை வளர்கிறது என காலம் வகுத்தார்(பார்க்க: மெய்யுள்,ப.101).  

1956-இன் பின்னான ஈழத்து இலக்கியப் போக்கினை விளக்க விளைந்த மு.த உலகளாவிய அரசியல் போக்கின் மூன்று கட்டங்களையும் ஈழத்து இலக்கியப் போக்கின் மூன்று கட்டங்களையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். சூயஸ் நெருக்கடியும் எகிப்தின் மீதான தாக்குதலும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியும் முதலாவது கட்டம். இது ஈழத்து இலக்கியப் போக்கில் நிலவிய மரபுவாதமும் அதனோடு ஒட்டிய நற்போக்கு இலக்கியப் பார்வையுடன் ஒப்பிடப்பட்டது. சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிநிலை இரண்டாவது காலகட்டம். இது மார்க்சிய முற்போக்கு இலக்கியப் பார்வையுடன் ஒப்பிடப்பட்டது. முதலாளித்துவத்துள்ளும் மார்க்சிய சோஸலிஸத்துள்ளும் அடங்காத, அவை இரண்டையும் ஊடுருவி நிற்கும் மூன்றாம் உலகின் நடுநிலைப் போக்கு மூன்றாவது கட்டம். இது மெய்முதல்வாத பார்வையுடன் ஒப்;பிடப்பட்டது. இவற்றில் மூன்றாவது கட்டமே இளம் பரம்பரையினரின் புதுவழித் தேடலாக அமையும் என்று குறிப்பிடுகின்றார். மரபுவாதம் இயைந்த நற்போக்குவாதமோ, மார்க்சிய அடிப்படையிலான முற்போக்குவாதமோ பூரண இலக்கியத்தைத் தராது. மெய்முதல்வாதப் பார்வைதான் பூரண இலக்கியத்தைத் தரும் என்றார். இந்த மெய்முதல்வாதப் பார்வை முன்னைய கட்டங்களிலான அதிருப்தியால் விளையும் என்றும், அது ஒரு வகை 'எதிர்-இலக்கியமாக"(Anti-இலக்கியம்) மாற்றமுறும் என்றார். 

இந்த எதிர்-இலக்கியப் பார்வை மெய்யுள்ளை தத்துவமாகக் கொள்கிறது என்பதே மு.த-வின் கருத்துநிலை. மெய்யுள் என்பது மெய்முதல்வாதம், பேரறிவுத்தளம், எதிர்-இலக்கியம், பெருந்தள வாழ்க்கை, பூரண இலக்கியம், பேர்ஞானநிலை, சர்வோதயம், பேர்மனிதப் பொதுவுடமை, ஞானப் பொதுவுடமை, கூட்டுமனம், சமாதானக் கலப்புநிலை, சத்திய யுகம், கலப்புக் காலம் போன்ற மு.த-வின் கருத்தாக்கங்களை உள்ளடக்கியவை. இக் கருத்தாக்கங்கள் மு.த-வின் வாழ்வுபற்றிய விசாரம், இலக்கிய நோக்குநிலை என்பவற்றை கொள்கை ரீதியாகப் பறைசாற்றுகின்ற அதேவேளை இன்றைய நிலையில் சில சிந்தனை முரண்களையும் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. கருத்துமுதல் வாதத்தையும் பொருள்முதல் வாதத்தையும் குறைபோக்குடைய தத்துவங்களாக நிலைநாட்ட தான் நம்பும் ஆன்மீகத் தரிசனங்களோடு இணைத்து இந்தக் கருத்தாக்கங்களை முன்வைக்கின்றார். அகவிடுதலைக்கும் ஆன்மீகவிடுதலைக்குமான தேடல்தான் இலக்கியத்தின் அடித்தளமாகவேண்டும் என்பதே அவரின் கருத்துநிலையின் குறிக்கோள். இந்தக் குறிக்கோளுக்கமைவாக மு.த முன்வைத்த விடயங்களைப் பின்வருமாறு நோக்கலாம்:

உலகளாவிய எல்லா நாடுகளின் பொதுத்தேவை நிலையிலும் ஈழத்தின் தனித்தேவை நிலையிலும் பூரண இலக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். அக ஆழத்தைக் கண்டுபிடித்தல், சர்வசமய ஞானப் புரட்சியை ஏற்படுத்தல், பழைய சமய ஞானத்திடமிருக்கும் உண்மைகளை சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்தல் போன்றவற்றின்மூலமே பூரண இலக்கியத்தை படைக்கலாம் என்றார். 'ஒருவன் தனது அக ஆழத்தைக் கண்டுபிடிக்காத வரைக்கும் முழுமையும் பூரணத்துவமும் வரப்போவதில்லை. அதனால் சமயஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன்படுத்த இனிமேல் இந்த எழுத்தாளர்கள்தான் முன்வரவேண்டும். சமய ஸ்தாபனங்கள் மிகக்குறுகிய வட்டங்களுக்குள் நிற்கின்றன. அவற்றின் குறுகிய போக்கைத் தகர்த்தெறிந்து, சர்வ சமய ஞானப் புரட்சியையும், அது கொடுத்துதவும் பொதுவுடமை மலர்ச்சியையும் எழுத்தாளர்களும் கலைஞர்களுமே இனிமேல் கொண்டுவரவேண்டும். பழைய சமய ஞானத்திடமிருக்கும் உண்மையை சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்கச் செய்யவேண்டும். அதற்காக ஒவ்வொருவனும் தனது அகத்திலேயே அந்த ஞானத்தை எழுப்பவேண்டும். வர்க்கவேறுபாடுகளும் குணவேறுபாடுகளும் அங்குதான் பொதிந்து கிடக்கின்றன. அவையே பிற்போக்குக் கோட்டைகளாகவும், பிறப்புப் பிறப்பாய் வரும் இயல்புகளின் மறைவிடங்களாகவும் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்றி, அங்கு புரட்சியைக் கொண்டுசென்று முழுமையின் மலர்ச்சியை ஏற்படுத்தாத வரைக்கும் புறச்சூழலில் மட்டும் புரட்சியை நடத்திப் பூரண இலக்கியத்தையும் சரி முழுமையான வாழ்க்கையையும் சரி கொண்டுவர முடியாது. எழுத்தாளர்கள் இனிமேல் அதையும் உணரவேண்டும்"(மெய்யுள், ப.38) என்று குறிப்பிடுவது மு.த-வின் மெய்யுள்ளின் அடிப்டையான ஆன்மீகநோக்கினை புலப்படுத்துகின்றது.

கலை கலைக்காக, கலை சமூகத்துக்காக என்ற கொள்கைகளோடு கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டவர்களை விமர்சனம் செய்வதன்வழி அரவிந்தரின் பூரணயோகம் போல பூரண இலக்கியமும் அமைதல்வேண்டும் என்றார். 'கலை கலைக்காக என்பதும் கலை கட்சிக்காக என்பதும் இலக்கியத்தின் இலட்சியத்தை உணர்ந்தும் அதன் வழியில் பூரணமாகச் செல்லாத இடைத்தரிப்புகள்தான். அழகுணர்ச்சி மட்டும்தான் இலக்கியத்தை உருவாக்குபவை என்று நினைத்து, விளக்கில் விழுந்த பூச்சிகள்போல் இடையில் அழிந்தார்கள் கலை கலைக்காக என்று வாதாடியவர்களில் பெரும்பாலோர். கலை கட்சிக்காக என்பவர்கள் கலையை வெறும் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி, இலக்கியத்தை வெறும் யந்திரமுயற்சியாக நிறுத்திவிடுகின்றனர்"(மெய்யுள், ப.28) என்று குறிப்பிடுகின்ற மு.த நோய்தீர்ப்பதற்குரிய பூரண இலக்கியம் பற்றி குறிப்பிட்டு, அதற்குரிய கோட்பாடாக 'பிரபஞ்ச யதார்த்தமே" அமையும் என்றார். 

பிரபஞ்ச யதார்த்தம் என்ற கொள்கையை தாங்கி நிற்கும் அடித்தளமாக மு.த ஆன்மீகத்தையும் சமயஞானத்தையும் வலியுறுத்துகின்றார். படைப்பின் பின்னே ஓர் ஆன்மீகம் அல்லது அறம் இருத்தல்வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த அறம் சமயஞானத்திலிருந்துதான் வரவேண்டும் என்று வாதிடுவதன் பொருத்தப்பாடு என்ன? என்பது அன்று விடைகாணப்படவேண்டிய வினாவாகின்றது.


மு.த-வின் மெய்யுள் 'Anti-இலக்கியம்" அல்லது 'இலக்கியத்தின் அழிவு" என்றொரு கருத்தாக்கத்தினை முன்வைத்திருந்தது. மெய்யுள்ளை விளக்க மு.த தனது படைப்புக்களில் கருத்தாடலுக்காக உருவாக்கிய பாத்திரமான நல்லசிவத்தின் வாயிலாக அந்தக் கருத்தாக்கத்தினை விளக்குகின்றார். 'மனித இனம் இனிமேல் கலை, இலக்கியகாரர்களிடமிருந்து கற்பனையை எதிர்பார்க்கப்போவதில்லை. வாழ்க்கையையே கலை, இலக்கியமாக்கும் பெரும் பணியையே எதிர்பார்க்கிறது. அதற்கு முதற்படியாக இப்போதிருக்கும் கலை, இலக்கிய முறையையே முற்றாக அழிக்கவேண்டும்....... அதை அழிப்பதற்கு அதே கலை, இலக்கியத்தையே பயன்படுத்தவேண்டும். மாற்றத்துக்கு முந்திய இடைப்பருவம் அதுதான். கலையை அழிக்கும் கலை, இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்"(மெய்யுள், ப.46) என்று நல்லசிவத்தின் வாயால் மு.த பேசுகின்றார். அத்துடன் 'கலை, இலக்கியமும் இனிச் சாகிற காலம். முழுவாழ்க்கையே கலையாகவும் தொழுகையாகவும் பெரும் பரவசத்தொழிலாகவும் வளரும்போது போலியான ஒரு கலை, இலக்கியம் என்ற தனிப்பிரிவு எதற்கு?"(மெய்யுள், ப.48) என்று கேள்வி எழுப்புகின்றார். அதுவரை இருந்துவந்த கலை, இலக்கியத்தின் போக்கினை நிராகரித்து உள்ளதை உள்ளபடி விஞ்ஞானிகள் கூறுவதுபோல கற்பனைதவிர்த்துக் கூறுவதே இலக்கியத்தின் பணியாகவேண்டும் என்றார். இதற்காகப் பல சந்தர்ப்பங்களில் ஆதர் சி கிளார்க்கை எடுத்துக்காட்டுகின்றார். 

உள்ளதை உள்ளபடி கூறுவது விஞ்ஞானத்தின் பண்பு. இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், விஞ்ஞானம் பொருளை நிராகரிப்பதில்லை. விஞ்ஞானத்தின் விருத்திதான் பொருள் முதல் வாதத்தின் அடிப்படை. விஞ்ஞானத்தின் விஸ்வரூப எழுச்சியின் பின்னால் நின்று கொண்டு விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒன்றாக இணைந்தியங்குதல் சாத்தியமாகுமா? என்று கேட்கும் நிலை தோன்றுகின்றது. கலையை அழிக்கும் கலை அல்லது இலக்கியத்தை அழிக்கும் இலக்கியத்தால் பொருளால் ஆக்கிரமிக்கப்பட்ட வாழ்க்கையை கடந்து செல்வதற்கான ஆன்மீகத்தைச் சொல்ல முடிந்தளவிற்கு அதன் விஸ்வரூப வளர்ச்சியின் யதார்த்தமான சிதைவுகளைச் சொல்ல முடியுமா? என்பது சிந்திக்கவேண்டியதே.


மெய்யுள் விளக்கும் கருத்தாக்கங்களில் 'பேரறிவுத்தளம்" மற்றும் 'பெருந்தளவாழ்க்கை" என்பன குறிப்பிடத்தக்கவை. 'மனிதன் உடல், உயிர், மனம் ஆகிய மூன்று தளங்களுக்குமுரியவனாக இன்று இருக்கிறான்........ இனி வரும் தளம் பேரறிவுத் தளமாகும்"(மெய்யுள், ப.52) என்று குறிப்பிட்டு சடவுலகம் பொருளை முதலாகக் கொண்டது, மனதைக் கடந்த நிலையில் ஒருவன் விஞ்ஞானமய கோசத்துக்குச் செல்கின்றான். இது மனோமயகோசத்திலும் உயர்வானது. மனதைக் கடந்து விஞ்ஞானமயகோசத்துக்கு வருவதே பேரறிவுநிலையாகும். இந்தப் பேரறிவுநிலைக்குரிய வாழ்வு பெருந்தள வாழ்வாகின்றது. இந்நிலையில் முக்குணங்களைக் கடந்த சத்தியநிலைக்கு வாழ்வு செல்கின்றது. இதனையே கலை, இலக்கியங்கள் பாடவேண்டும் என்பதே மு.த-வின் கருத்து. 

அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், ஆனந்தமயகோசம், விஞ்ஞானமயகோசம் என்று இந்துத் தத்துவங்களில் விளக்கப்படும் பஞ்சகோசங்கள் பற்றிய விளக்கத்தினை துணைகொண்டு சடத்துக்குக் கொடுக்கப்படும் முதன்மையினை அறிவுக்குக் கொடுத்து கலை. இலக்கியங்கள் படைக்கப்படும் நிலையே விஞ்ஞானமயகோசமான பேரறிவுத்தளம் என்றார். மார்க்சியம் குறிப்பிடும் பொருள்முதல்வாதத்தினை நிராகரிப்பதற்கு பஞ்சகோசம் பற்றிய தத்துவ விசாரங்களை துணைகொள்கின்றார். பொருள்தளம் அல்லது சடத்தளம், மனத்தளம், பேரறிவுத்தளம் என முத்தளங்களை குறிப்பிடுகின்றார். இவற்றில் பேரறிவுத்தளத்துக்கான கலை, இலக்கியத்துக்கு வழிகாட்டுவதே மெய்யுள் என்றார். மார்க்சியம் தனது பொருள்முதல்வாதத்தில் உற்பத்தி உறவுமுறை பற்றிக் குறிப்பிடும் கருத்துக்களை நிராகரிக்கவே இவற்றை விளக்குகின்றார். 'சடத்தின் தளமே நிலையற்று வழுவிக்கொண்டோடும்போது, நிரந்தர அகவிடுதலையை வெறும் உற்பத்திச் சாதன உறவுமுறையால் மட்டும் எப்படி நிரந்தரமாக நிறுவலாம்?"(மெய்யுள், ப.57) என கேள்வியெழுப்புகின்றார். 

மேலும் 'மனித குலம் முழுவதும் மனத்தளத்தில் ஏறி, அதற்கான உண்மையான சாத்வீக குணத்திலேயே(அறிவு, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை) பெரும்போக்காக லயிக்கத் தொடங்கிவிட்டதென்றால், மனத்தளத்துக்கு அடுத்த பெருந்தளமான பேரறிவுத்தளத்துக்குப் பரிணாமம் ஏறத்தொடங்கும் காலம் வந்துவிட்டது என்ற முடிவு தர்க்கரீதியானது"(மெய்யுள்,ப.61) என்று கூறுவது சாத்வீக குணங்களென இங்கு வரையறுக்கப்பட்ட பண்புகளை இன்றைய உலகம் தாண்டிப் பயணிக்கத் தொடங்கிவிட்டதா? என்ற வினாவை எழுப்புகின்றது. ஏனெனில், இன்றைய உலகத்தில் இக்குணங்களுக்கான ஏற்புடமையே இன்னும் கிடைக்காத நிலையில் அவற்றைத்தாண்டிய பேரறிவுத்தளத்தை எட்டுதல் சாத்தியமாகுமா? என்ற சந்தேகம் நிலைத்திருக்கிறது. 'இராமகிரு~;ணருக்குப் பிந்திய இந்த இருபதாம் நூற்றாண்டு, மனித வரலாறு சமூகத்தின் சகலரும் பிராமணராகிய வரலாற்றையே குறிக்கின்றது எனலாம். வர்ண எல்லைகள் முற்றாகக் கலந்து கரைந்துவிட்டன. சகலரின் மனமும் மனத்தளத்திலேயே லயிக்கவும், அதன் சாத்வீக குணத்திலேயே நிற்கவும், அதற்குரிய அறிவு வீச்சைக் காட்டவும் ஆரம்பித்துள்ள காலம். பேரறிவுத்தளமான அடுத்த பெருந்தளத் தாக்கத்தின் அருட்டலைச் சகலரும் ஏதோ ஒரு வகையில் உணரத்தொடங்கியுள்ள காலம்"(மெய்யுள்,ப.61) என்று பேரறிவுத்தளத்துக்குத் தயாராகும் காலம் பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆயினும், மனிதர்கள் அனைவரிடத்திலும் சாத்வீகப் பண்புகள் அதிகரிக்கும், மக்கள் எல்லாரும் கலந்து கரைந்துவிடுவார்கள், சகலரும் பிராமணராகிவிடுவார்கள் என்று வரும் கருத்துக்களின் சமகால யதார்த்தம் எதிர்மறையானது. இந்நிலையில் பேரறிவுத்தளத்தை எட்டுதலின் சாத்தியம் குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது.


'பேர்ஞானநிலை" பற்றிய மு.த-வின் விளக்கம் மார்க்சியத்தின் மதஎதிர்ப்புக்கான பதிலிறுப்பாகவே அமைந்தது. மார்க்ஸ் மதத்தை அபின் என்று ஒதுக்கிவிட்டார் என்பது மு.த-வின் கவலை. 'தனிப்பட்ட சமய ஸ்தாபனங்களையும் அவற்றின் தவறான பழக்கவழக்கங்களையும் ஒதுக்குவது வேறு. அவற்றுக்குக் காரணமாயிருந்த சடத்தையும் நினைவையும் தாண்டிய பேர்ஞானநிலையை ஒதுக்குவது வேறு. பின்னதை ஒதுக்க முடியாது. அது நிரந்தரமானது. மார்க்ஸ் அதையுமே அபின் என்று ஒதுக்கிவிட முயன்றார். ஆனால், இன்றைய விஞ்ஞானம் அந்த அடித்தளப் பேர்ஞான விடுதலை நிலையை நோக்கியே அடியெடுத்து வைக்க முயல்கிறது"(மெய்யுள்,ப.56) என்று மார்க்சியத்தை விமர்சித்தார். இன்றைய விஞ்ஞானம் பேர்ஞானத்தினை நோக்கி நகர்கிறது என்று மு.த எதிர்பார்ப்பது விஞ்ஞானத்தின் வழியதான பொருட்பெருக்கம், நுகர்வுவாதம், பின்-கைத்தொழில்மயமாக்க சமூக விளைவுகள் என்பவற்றால் மலிந்துபோன உலகத்தில் சமயங்கள் மற்றும் ஆன்மீக சிந்தனைகளின் தடம்புரழ்வுகளைக்| கருத்திலெடுக்காத மிகை எளிமையாக்கமோ என எண்ணத்தூண்டுகின்றது. 


மு.த 'சர்வோதயம்" என்றொரு கருத்தாக்கத்தினை முன்வைத்து அனைத்திலும் சத்தியம் வெளிப்பட்டுத் துலங்கும் நிலையே அது என்றார். 'புதிய பெருந்தத்துவம் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற பாகுபாடுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பொருளையும் நினைவையும் கடந்த சத்தியம் அல்லது உண்மை நிலை சத்தாகவும் சித்தாகவும் இருக்கிறபடியால் பாகுபாட்;டுக்கு இடம் இல்லை. புதிய தத்துவம் அடிப்படையில் ஆன்மீகத் தத்துவமாகவே இருக்கும். அதனால் இதுவரை நிலவிய சமயங்களினதும் அடிப்படை ஒருமை நிலைநாட்டப்படும். சகலமும் சத்தியமே என்ற அடிப்படை உண்மை சகல வேலைகளிலும், சகல சமூக இயக்கங்களிலும் தெரியவரும். அடிப்படைச் சத்திய அத்வைத நிலையைச் சகலத்திலும் தெரிய வைப்பதே புதிய பெருந்தத்தவத்தின் நோக்கமாக இருக்கும். சகலத்திலும் எழுச்சியடைவது சத்தியமே. அந்த எழுச்சியையே ஷசர்வோதயம்| என்பது குறிக்கின்றது"(மெய்யுள்,ப.57) என்று அதனை விளக்கினார். 

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தாம் குறிப்பிடும் மெய்யுள் நிலையினை அத்துவிதமானது என்று குறிப்பிடுகின்றார். பொருளும்(சடம்- உடல்), நினைவும்(கருத்து-மனம்) கலந்தும், அவற்றைக் கடந்தும் உருவாகும் சத்திய(மெய்) நிலை என்றார். அதாவது கலை, இலக்கியங்கள் பொருளையும் கருத்தையும் கடந்து மெய்யைக் காண்பதாக அமைய வேண்டுமென்றார். படைப்பாக்கத்தில் மெய்மை அமைவதை எவரும் மறுதலிப்பதற்கில்லை. ஆயினும், அந்த மெய்மையினை சமயங்களின் அடிப்படை ஒற்றுமையால் நிலைநாட்ட முடியும் என்று மு.த நம்புவதும் சமயங்களின் சரித்திரத்தில் நிகழ்ந்துவரும் முரண்களைக் கருத்திலெடுக்காத ஒன்றாக அமைகின்றது. அத்துவிதமாக கலக்கும் நிலையினை 'மேல்தள ஆசார மரபும் சமயத்தை மறுக்கும் பொருள்முதல்வாதமும் ஆன்மீக அடிப்படையிற் கலக்கும் இன்றைய காலகட்டம் சகல மக்களும் ஞானிகளாகும் பரிமாணப் போக்கு பரவலாக வந்துவிட்டது என்பதையே குறிக்கின்றது"(மெய்யுள்,ப.135) என்று குறிப்பிட்டிருப்பது அவரது கருத்தினையும் மீண்டும் ஒரு இலட்சிவாதப்  பெறுமானத்துடன் பார்க்கவைக்கின்றது. 

இந்த அத்துவித நிலைக்கு உலகம் நகர்வதை நிரூபிக்க அவர் எடுத்துக்கூறும் நடைமுறை விளக்கங்கள் சுவாரஸ்யமானவை. இலங்கை மார்க்சியக் கட்சியான LSSP.-யின் தீவிர புதுப்பரம்பரை இளம் வட்டத்தினர் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடைப்பட்ட உபவர்க்க உருவாக்கம் என்றும் அவர்கள் இலங்கையில் முதுபெரும் மார்க்சிய மற்றும் முதலாளித்துவக் கட்சிகளை புறக்கணித்துப் போராடத் துணிகின்றனர் என்றும்; விளக்கினார். அமெரிக்காவில் முதலாளித்துவ-சோஸலிஸ பலாத்கார எதிர்ப்பு, பங்களாதேஸ் கொரில்லாப் போராட்டம், பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் ஆட்;சிக்கான எதிர்ப்பு, தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வினர் வெளி ஆசார நவபாஸிஸ கருணாநிதி ஆட்சியை எதிர்ப்பது போன்ற எடுத்துக்காட்டுக்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் மாற்றங்கள் பொருளையும் கருத்தையும் கடந்தேகும் அத்துவித சத்தியநிலைக்கு மனிதவாழ்வை இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையை அன்று மு.த-வுக்கு வழங்கியிருப்பினும் அவரது கருத்துக்கள் வெளிப்பட்டபின் நாற்பது வருடங்களின் மடிவில் நவதாராண்மைவாத முதலாளித்துவமும் அதற்கு எதிரான விளைவுகளும் பெரும் சக்தியாகவே உருவெடுத்துள்ளது. உலகை இயக்கும் சத்தியமாக பொருளும் அதற்கான போராட்டங்களும் திடப்பட்டுக் கிடப்பதே யதார்த்தமாகியுள்ளது. நவதாரண்மை நிலை கலை, இலக்கியத்தின் போக்கினைத் தீர்மானிக்கும் பலம்மிக்க சக்தியாகிவிட்டது. மதங்களைக்கூட ஆதிக்கம்மிக்க சக்திகள் தமது ஆதிக்க எல்லையை விரிவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் பயன்படுத்திவருகின்றனர்.  


மு.த 'எழுத்தாளர் பேரவை" பற்றி ஆதங்கத்துடன் விளக்கியுள்ளார். பூரண இலக்கியம் படைக்கப்பட எழுத்தாளர் பேரவையின் அவசியம் பற்றி விளக்கினார். எழுத்தாளர்பேரவை என்பது 'அரசியல்வாதிகளைக் கொண்ட நாட்டின் பாராளுமன்றத்துக்குச் சமமாகப் பொறுப்பபும் பங்கும் தனக்கும் உண்டு எனக் கருதிச் செயல்படும் எழுத்தாளர் பேரவையே முழுச் சமூகத்தையும் முற்போக்காக முழுமையை நோக்கி வளர்க்க முயலும் ஓர் அரசாங்கத்தின் உண்மையான மேற்சபையாக, மூதவையாக இயங்குவதாக இருக்கும்"(மெய்யுள்,ப.38) என்றார். சகல துறைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து முழுமையடைய எழுத்தாளர் பேரவை அவசியம் என்றார். இந்தக் கருத்துக்கும் அத்துவிதமாக கொள்கைகள் கலக்கும் நிலைக்குமிடையில் தொடர்புள்ளது. ஏனெனில் இந்த எழுத்தாளர் பேரவையின் நோக்கம்கூட பூரண சமய ஞானத்தின் வழியான பூரண இலக்கியமே என்றார். 


சரித்திர வளர்ச்சி ஒன்றின் பின்னால் சத்தியப்பேரறிவு நிற்கிறது என்று வாதிடுகின்ற மு.த, ஷகூட்டுமனம்| என்ற கருத்தாக்கத்தினை விளக்குகின்றார். உலகில் நடைபெறும் சிறு சிறு போராட்டங்கள் யாவும் அடித்தளமான ஆத்மாவின் ஞானக்குரலுடன் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு உருமாற்றப்படவேண்டும் என்றார். கூட்டுமனமானது எவ்வாறு உருவம் பெறுகிறது என்று விளக்கினார். 'மேல்தள மனநிலை மெல்ல மெல்ல அதற்குக் கீழுள்ள இடைத்தள இயக்கத்தாலும், இடைத்தள இயக்கம் அதற்கும் கீழுள்ள அடித்தள இயக்கத்தாலும் மெல்ல மெல்ல ஊடுருவப்பட்டு ஒன்றோடு ஒன்று எல்லைகளற்றுக் கலந்து உருமாறும் பூரணப் போக்குக்குரிய".....(மெய்யுள்,ப.100) ஒன்றாகவே கூட்டுமனத்தை விளக்குகின்றார். இலங்கையில் 1956-இற்குப் பின்னர் நிகழ்ந்துவரும் உருமாற்றம் மனத்தளங்களுக்கிடையிலான கலப்பை சாத்தியமாக்கி தான் குறிப்பிடும் பெருந்தத்துவ நிலைக்கு வரும் என்று நம்பினார். மனத்தளங்களுக்கிடையிலான எல்லைகளற்ற கலப்பை ஏற்படத்த ஷமெய்முதல்வாத்தினால்|தான் முடியும் என்று நம்பினார். அதற்கான சரித்திர வளர்ச்சியை விளக்கினார். இந்த வளர்ச்சி மூன்று பெரும் சர்வதேசப் போக்குகளை ஒத்;திருந்தது என்று விளக்கினார். 'அதாவது ஈழத்து ஆசார மரபுவாதமும் அதனோடு இணைந்த நற்போக்கு இலக்கியப் பார்வையும் சர்வதேச முதலாளித்துவப் போக்கையும் அதற்கு உதவும் சமய ஆசாரத்தையும் ஒத்திருந்தன. ஈழத்து மார்க்சிய முற்போக்கு இலக்கியப் பார்வை சர்வதேச சோஸலிஸப் போக்கை ஒத்திருந்ததுடன், நேரடியாக அதிலிருந்தே பலத்தைப் பெறுவதாகவும் இருந்தது. அதேபோல் ஈழத்து மூன்றாம் பக்க இலக்கியப் பார்வை சர்வதேச அரங்கில் காணப்படும் மூன்றாம் உலகத்தின் நடுநிலைக் கொள்கையையும் சகல நாடுகளிலுமுள்ள இளம் பரம்பரையினரின் புதுவழித்தேடலையும் ஒத்திருப்பதுடன் காலப்போக்கில் அவற்றுக்குத் தத்துவார்த்த ரீதியாக அர்த்தங்கொடுத்து ஆற்றுப்படுத்துவதாகவும் வளர்ந்துள்ளது"(மெய்யுள்,ப.102) என்றார். அத்துடன்,'கூட்டுமனத்தின் இடைத்தள இயக்கமும் அடித்தள இயக்கமும் இன்னும் மேல்தளத்தின் பெரும்பான்மைப் பலத்தைப் பெறாதிருந்த போதிலும் அவையே சமூக, இன, மொழி, சமயப் பிரிவுகளைக் கடந்து, சர்வதேசமெங்கும் வாழும் சகல மக்களினதும் இயக்கங்களாக வளரக்கூடியவையாக இருக்கின்றன"(மெய்யுள்,ப.100) என்று குறிப்பிட்டார். மேல்தளத்தின் பெரும்பான்மை பலம் என்பது அமெரிக்கப் பன்மைப் பண்பாட்டுவாதம் வேண்டிநிற்கும் ஒரு எல்லைகள் தகர்ந்த பண்பாட்டுச் சூழலையா கருதுகின்றது? என்பது வினாவாக நிற்கிறது. தேச அளவில்தானும் இனம், மொழி, மதம் என்ற அடிப்படைகளில் இந்தக் கூட்டுமனநிலை சாத்தியமாகாததன் விளைவுகளை இலங்கைச் சமூகம் இன்னும் அனுபவித்தே வருகின்றது.


முன்னர் குறிப்பிடப்பட்ட தளங்களோடு தொடர்புடையதாக 'கலப்புக்காலம்" என்ற கருத்தாக்கத்தினைக் விளக்கியுள்ளார். மனத்தளத்துக்கும் பேரறிவுத்தளத்துக்கும் இடையே ஒரு மாற்றுவலயக் காலம் உள்ளதெனவும், மனத்தளத்துக்குரிய காலம் கலியுகம் எனவும் பேரறிவுத்தளத்துக்கான காலம் சக்தியுகம் எனவும் குறிப்பிட்டு, அந்தக் கலப்புக்காலம் மனித-பெருமனிதக் கலப்பு, மனித-தேவக் கலப்பு, அறிவு-பேரறிவுக் கலப்பு என்று மாற்றுவலயக் கலப்புக்கு உட்படும் என்றார். இந்தக் கலப்பினால் வலயங்கள் இழக்கப்படும். துருவங்கள் இல்லாதொழிக்கப்படும். வர்க்கங்களின் எல்லைகள் தளர்த்தப்பட்டு கலக்கவைக்கப்படும். இதனை விளக்க 'இராமகிரு~;ணருக்குப் பிந்திய இந்த இருபதாம் நூற்றாண்டு, மனித வரலாறு சமூகத்தின் சகலரும் பிராமணராகிய வரலாற்றையே குறிக்கிறது எனலாம்"(மெய்யுள்,ப.61) என்று குறிப்பிடுவதுடன், இந்த மாற்றுவலயக் காலத்தினை தான் பின்தொடரும் பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரியின் காலம் என்று வரையறுக்கின்றார். தளர்க்கப்படுதல், கலக்கப்படுதல், இழக்கப்படுதல் முதலிய சொல்லாடல்கள் பின்-நவீனத்துவப் பரிபாசையில் கட்டுடைத்தல் அல்லது தகர்த்தல் என்பவற்றுடன் ஒருங்குவைத்து நோக்கத்தக்கது. இது ஓரளவுக்கு பின்முதலாளிய சமூகத்தின் செல்நெறியை விளக்கும் அடிப்படைகளைக் கொண்டனவெனினும், அதனை இராமகிருஸ்ணர், நந்தகோபாலகிரியின் ஆத்மீக தரிசன ஒளியில் காண முனைவது மு.த-வின் விஞ்ஞான அடிப்படைகளை மீறிய சமய மற்றும் ஆன்மீக வயப்பாட்டினை காட்டுகின்றது. இந்தக் கலப்புநிலையை சமயமோ ஆன்மீகமோ தோற்றுவித்ததைக் காட்டிலும் அரசியலும் பொருளாதாரமும் தீர்மானித்தது என்பதன் உண்மை கருத்தாடப்பட வேண்டும். 


மேல்தள ஆசாரம் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றார் மு.த. நற்போக்கு இலக்கியப் பார்வையை தங்கள் கருத்துநிலையாகக் கொண்டவர்கள் மீதான வெளிப்படையான விமர்சனமாக அது அமைந்தது. முற்போக்குவாதம் பற்றிக் குறிப்பிடும்போது 'அது மேல்தள முதலாளித்துவப் பண்டித ஆசார மரபைவிட அடித்தள ஆன்மீக ஞான மரபுக்குக் கிட்டே இருக்கிறது. அடித்தள ஆசார மரபுக்கும் மேல்தள ஆசார மரபுக்கும் இடைப்பட்டு நிற்கிறது"(மெய்யுள்,ப.126) என்றார். தான் முன்வைத்த மெய்முதல்வாதம் இந்த இரு ஆசார மரபுகளையும் கடந்தது என்று விளக்குவதற்காக இந்தக் கருத்தாக்கத்தினைப் பிரயோகித்தார். சைவசித்தாந்த, வேதாந்த மரபுகளை தன் மெய்யுள்ளை நிலைநிறுத்துவதற்கான விவாதத்திற்குப் அதிகளவில் பயன்படுத்திய மு.த ஆறுமுகநாவலர் முதல் வளர்க்கப்படும் மேல்பூச்சு பண்டித ஆசாரமரபு, வேதகாலம் முதல் பாரதி வரை வளர்த்த ஞான மரபைப் போலல்ல என்றார் மேல்பூச்சுப் பண்டித ஆசார மரபுக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய பொருள்முதல் வாதத்திற்கும் வேறுபாடில்லை என்றார். அத்துடன், அந்த மேல்பூச்சுப் பண்டித ஆசார மரபுக்குத் துணையான நற்போக்கு, தேசிய இலக்கியம் என்பனவும் அர்த்தமற்ற வெளிப்பூச்சுகள் என்றார். இந்த நிலையில் மு.த-விடம் ஒரு முரண்பாட்டைக் காணலாம். அதாவது, கூட்டுமனம் பற்றி வலியுறுத்தும் மு.த தேசிய இலக்கியத்தை அர்த்தமற்ற வெளிப்பூச்சு என்று குறிப்பிடுவது விவாதப் பொருளாகலாம். ஆயினும், 'மேற்கத்தைய முதலாளித்துவப் போக்கும், ஈழத்து இலக்கியத்தின் மரபுவாத நற்போக்கும், ஈழத் தமிழர் கூட்டணியின் காந்தீய ஆசாரப் போராட்டமும் ஒரே மேல்பூச்சு மரபு, மத்தாப்பு, புஸ்வாணங்களேதான்"(மெய்யுள், ப.124) என்றார். மார்க்சியம் மதத்தினை மறுதலிப்பதை நிராகரிக்கும் மெய்யுள் சமயத்தினுள்ளமைந்த ஆசார மரபினையும் விமர்சிப்பதைக் காணலாம்.


'பொதுவுடமை" பற்றி குறிப்பிட்ட மு.த, 'ஞானப் பொதுவுடமை" எனும் கருத்தாக்கத்தினை குறிப்பிடுகின்றார். 'ஞானப்பொதுவுடமையும் பொருளாதாரப் பொதுவுடமையும் ஒன்றையொன்று தழுவிவர வேண்டும். அப்போதுதான் இரண்டும் வெற்றியடையும். இல்லாவிட்டால் ஞானப் பொதுவுடமை கீழிறங்குவதற்குரிய சரியான தளம் கிடையாது. பொருளாதகரப் பொதுவுடமை சீராக வளர்ச்சியடைவதற்குரிய சரியான தலைமை கிடையாது. அதனால் இரண்டும் தோல்வியடையவே செய்யும்"(மெய்யுள்,ப.67) என்று வாதிடுகின்றார். இன்றைய உலகப் போக்கில் பொருளாதாரப் பொதுவுடமையின் சத்தியம் குறைவானது. அத்தகைய ஒரு நிலை வரவேண்டுமாயின் அது அறிவினால் விளையமுடியும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனெனில் அறிவுதான் மூலதனம் என்ற கருத்தாக்கம் இன்றுள்ளது. அதனால் அறிவைப் பண்டப்பொருளாக உபயோகித்துப் பொருளாதாரத் தேட்டம் பெறவே உலகம் முனைகின்றது. இந்த நிலையில் 'ஞானம்" பொதுவுடமையாக்கப்பட என்ன வழி? அது ஆத்ம ஞானமாக அமைந்தாலொழிய வேறுவகையில் சாத்தியமாகாது என்று சிந்திப்பதில் தவறில்லை. ஆனால். அந்த ஆத்ம ஞானத்தை இந்தப்பொருள்சார் உலகைத்தாண்டி வளர்த்தெடுப்பதில் இதற்கு முன்னரே பல இயக்கநிலைப்பட்ட தோல்லிகளும் நிகழ்ந்துள்ளதை நாம் கவனத்திலெடுக்கவேண்டும்.

மனித பரிணாமத்தைச் சத்திய உச்சம் நோக்கித் துரிதப்படுத்த வகுக்கப்பட்டவைதான் வர்ணங்கள், முக்குணங்கள், நால்வகை ஆச்சிரமங்கள் என்ற இந்துமத அறநெறியை மு.த முழுமையாக ஏற்கின்றார். அதன் அடிப்படைகளை தெளிவாக விளக்குகின்றார். ஆயினும் மனத்தைக் கடந்த பேரறிவுத்தளத்துக்குள் ஊடுருவமுயன்றவர்களாகப் சாத்வீக குணத்தினரான பிராமணர்கள் அமைவர்(பார்க்க: மெய்யுள்,ப.59) என்றார். பேரறிவுத்தளம் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்குமுரியது(பார்க்க:மெய்யுள்,ப.60) என்றார். அதேவேளை, 'இந்தப் பிராமணர்களும், குருமாரும் மக்களைச் சுரண்டி வாழும் முதலாளிகள் வளர்த்த பெருச்சாளிகள்தான்" (மெய்யுள்,ப.116) என்று நந்தகோபாலகிரியின் சர்வமதசங்கம் ஒலித்த மகாவாக்கியங்களில் ஒன்றைக் குறிப்பிடுகின்றார். இந்த முரண்நிலை வர்க்கமும் குணங்களும் சத்திய உச்சத்தை எட்டவைக்கும் என்ற நம்பிக்கையை தகர்த்துவிடுகின்றது. இது மார்க்சியம் சொல்லும் மதஎதிர்ப்பு மற்றும் பெரியாரியம் சொல்லும் பிராமணிய எதிர்ப்பு என்பவற்றுடன் ஒருங்குவைத்து நோக்கத்தக்கது. 

மேற்கண்ட கருத்துக்களைப் போல ஏராளமான சிந்தனைகள் மு.த-வின் மெய்யுள்ளின் உள்ளடக்கமாகச் செறிந்துள்ளது. அவை பொருள்முதல்வாத அடிப்படைகளின் பலவீனங்களின் அடித்தளத்தில் தோன்றிய கருத்துக்களாகவும், மு.த-வின் சமகாலத்து கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் போக்குகளுக்கான எதிர்வினைகயாகவும் அமைந்தன. தர்க்கம் என்னும் அடிப்படையில் நகரும் மெய்யுள் பற்றிய கருத்தாடல் பொருள்சார் உலகைக் கடந்த ஆன்மீகத் தளத்தில் இயங்குகின்றது. அதற்குத் துணையாக தன்னை ஆகர்~pத்த ஆன்மீகவாதிகளின் சிந்தனைத் தேட்டங்களை மு.த பிரயோகித்துள்ளார. அந்தத் தேட்டத்தில் அவர் கொண்ட உறுதியான நம்பிக்கை அவரின் சமகால மற்றும் எதிர்கால உலகப்போக்கின் மீதாக அவநம்பிக்கையை கொடுத்தள்ளது. அது கலை, இலக்கிய இயக்கங்கள் மீதான எதிர்வினைகளாயின. இநத எதிர்வினையின் சில கருத்தாக்கங்கள் அவருக்குப் பிந்திய காலத்தில் வளர்ந்த சில கலை. இலக்கியக் கொள்கைகளோடு அணுக்கமாகவும் வந்துள்ளது. ஆயினும் அவர் சொல்வதைப்போல நிகழ்போக்கு வாழ்வின் மெய்மைகளைப் பிரதிபலிக்காத கலை, இலக்கியம் மாத்திரமன்றி உணரமுடியாத ஆன்மீக மெய்மைக்கு எதிராகப் பொய்மையாக வரும் இலக்கியங்களும் மெய்யுள்ளுக்கு எதிரானவையே என்றுதான் முடிகின்றது.

 


Comments